Friday, December 10, 2004

ஓலம் (கவிதை)

இரண்டாவது மாடியைச் சுற்றி
எப்போதும் கேட்டுக்கொண்டேயிருக்கும்
ஓர் ஓலம்.

முன்பொரு சமயம்
தூக்கிட்டுக்கொண்ட
சரவணனின் குரலாகவும் இல்லை
வேறெங்கோ தோன்றி
இங்கு எதிரொலிப்பதாகவுமில்லை
நான் வரும்போது
மிகச்சரியாகத் தொடங்கி
நான் நீங்கும்போது
மிகச்சரியாக முடித்துவிடுகிற
கச்சிதமான விளையாட்டு
பெண்ணொருத்தி யாராவது இருக்கக்கூடும்
என் புலன்களின் வழி
அவளைக் கண்டெடுக்க முடிவதாகப்
பாவித்துக்கொண்டேன், தெருக்களில்
கண்ணில் பட்டு
மறந்து
சட்டென நினைவுக்கு வரமறுக்கும்
ஒரு பெண்ணின் உருவத்தை
அவளுக்குப் பொருத்திவைத்து
மிகவும் சிநேகமானேன்
என் வரவுக்காகக் காத்திருந்து
என் காலடித்தடம் நெருங்க நெருங்க
மெல்லிய குரலில்
ஓலத்தைத் தொடங்குவாள்
சில சமயம் ஆணின் குரலாகத் தோன்றும்
பயத்தில் லேசான ஜில்லிடலும்
புல்லரிப்பும் தோன்ற
நீளும் ஓலத்தில் என்னை மறந்து
அறைக்குள் செல்வேன்...

தொடர்ந்து கொண்டிருந்த
அவிழ்க்கமுடியாத இப்புதிரின் முற்றுப்புள்ளி
அவ்வோலத்தின் சாயல்
என் குரலை ஒத்திருப்பதாக
நான் அறிந்த நேரத்தில் விழுந்தது, அப்போது
ஓலத்தை இழந்து
தனிமையை மீட்டுக்கொண்டு
இன்னொரு புதிரில் ஆழ்ந்தேன்.