Thursday, May 12, 2005

இருள் (கவிதை)

நீண்ட கடற்கரை ஒன்றில்
கருப்புச் சேலை அணிந்த பெண் நடந்துகொண்டிருக்கிறாள்
கரையெங்கும் இருள் அலை அலையாய் அலைந்துகொண்டிருக்கிறது
அந்த அலையினூடே அவளின் நடை சுருதியிழந்திருக்கிறது
அவள் வந்த பாதையில் உலர்ந்து கிடக்கிறது இரத்தத் தடம்
கண்ணெதிரே தெரியும் கோயிலொன்று
அவள் அருகே செல்லச் செல்ல
இடம்பெயர்ந்துகொண்டேயிருக்கிறது
அவள் அடைய வேண்டிய இடமது
நீண்ட யுகங்களாக.

Saturday, April 23, 2005

வராத பேருந்து - (கவிதை)

எந்த ஊருக்கும் போகவேண்டிய வேலையில்லாமல் காத்திருக்கிறது அந்நிறுத்தம்
எப்போதும்
வரவேண்டிய பேருந்துக்காக
என்றும் விடியலைக் கொண்டுவரும் பேருந்து அன்று வரவில்லை
நாளெங்கும் சொட்டிய வேர்வைத் துளிகளில் தன் முகம் பார்த்துக்கொண்டது அந்நிறுத்தம்
நீண்ட நேரத் தவமொன்றில் லயித்துப் போய் மயக்கமடைந்தபோது
வந்தது இன்னொரு பேருந்து பெருஞ்சத்தத்துடன்
பயணிகள் அமைதியைப் புறக்கணித்தபடி சலசல சத்தத்துடன் ஏறினார்கள்; இறங்கினார்கள்
அவர்கள் கலைந்தபின்பு காணக்கிடைத்த காற்தடங்களில் மனம் செலுத்தவில்லை அந்நிறுத்தம்
அதன் கனவுக் காற்தடங்களில் அவையில்லை
முதல்நாள் கையசைப்பில் விட்டுச்சென்ற சகதித் தடத்தில்
கண்ணூன்றி
பள்ளிக் குழந்தைகளைச் சுமந்து அப்பேருந்து வரும்
இன்னொரு விடியலுக்குக் காத்திருக்கிறது அந்நிறுத்தம்