Monday, August 30, 2004

வீரவநல்லூர் (கவிதை)

வீரவநல்லூரைப் பற்றிய கவிதை கண்டிப்பாய் எழுதவேண்டும்
முதல்வரியாய் "அந்தக் காலத்தில் குளத்தில் நீர் இருந்தது",
இரண்டு மூன்று வரிகளுக்குப் பின்
சண்முகா கொட்டகையையும் காந்திமதி டாக்கீஸ¤ம்.
ஊரின் செழுமைக்கு
சந்தையில் மண்டிக்கிடந்த காய்கறிக்கூழ் கொஞ்சம்.
மழை வர்ணனையும்
தெருவில் திரிந்த பசுக்கள் பற்றிய குறிப்பும் அவசியம்.
ஊர்ச்சாத்திரை, திரைகட்டிப் படம்,
சின்ன வயதில் சைக்கிள் ஓட்டிய கதை,
கூனியூருக்குச் செல்லும் பாதை, சுமைதாங்கிக்கல்,
பள்ளிக்கூடம், பொது லைப்ரரி எனத் தேடிப்பிடித்து
வார்த்தைகளை வளைத்தால்
வீரவநல்லூரின், எந்தவொரு ஊரின்
பழைய பொதுப்பிம்பம் தயாராகும்.
ஒரு ஊரைக் கவிதையில் சேமிப்பது சுலபம்.


Friday, August 27, 2004

தனிப்பனை (கவிதை)


பின்னோடிய பல மரங்களில்
ஜன்னல் வழியே உள்வந்து முன்னோடிய அத்தனிப்பனை
என் வீட்டு மாடியில் என்னை வரவேற்று
தன் தனிமை தொலைத்து என் தனிமை திணிக்கிறது
மொட்டை மாடியின் அரையடிச் சுவர் மீதேறிப் பார்த்தால்
தூரத் தெரியும் அதன் நிழல் எழுப்பும் எண்ணங்கள்
பிற்கனவுச் சித்திரங்கள் போல
கோர்த்தெடுக்க முடியாததாய்
நினைவுக்கு வரும்போதே மறந்துவிடுவதாய்
மறந்துவிட்ட நேரம் உள்ளுழலுவதாய்.
தெருவில் நுங்கு விற்பனின் குரல்
கனவில் பனைமரத்தின் குரலாய் ஒலிக்க
சட்டென விடிகிறது எனக்கு மட்டும்
என் வீட்டைக் கடக்கிறான் நுங்கு விற்பவன்
என் நினைவுகள் குவிகின்றன அத்தனிப்பனையின் மீது.
தனிமையெனச் சொல்லிக்கொண்டு
தனிமையின்றி
அதுவும் நானும் இப்போது நீங்களும்.

Tuesday, August 24, 2004

இயல்பாய் (கவிதை)


இயல்பாகவே நிகழவேண்டும் எந்தவொன்றும்
மெல்லிய சாரல் விழுந்த நேரத்தில் மண்வாசம் கிளர்ந்த மாதிரி
என்று தொடங்கியதென சொல்லமுடியாத நம்நட்பு மாதிரி
எந்தக் கணத்தில் காலை புலர்ந்ததென அறியமுடியாத மாதிரி
பெருக்கிய அறையில் தூசி சேர்கிற மாதிரி
தொடங்கிய நேரம்தெரியாமல் வியாபிக்கிற பசி மாதிரி
என்றேனும் நிகழப்போகும் நம்நட்பின் பிரிவுகூட
ஒரு கவிதை போல, என் இயல்பைப் போல
ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பிணமாகிப் போன மனிதன் போல
பிரிந்த சுவடில்லாமல் நிகழ எதிர்பார்க்கிறேன்
இயல்பான எந்தவொன்றும் என்னை மகிழச்செய்கிறது
இயல்பிழந்துபோன நம்நட்புக்கு
பிரிவில் மகிழல் இயல்பென பிரிவோம்

எறும்பிலிருந்து யானைக்கு


இன்று தொட்டுத் தொடர்கிறது என் பயணம். அன்புடை நெஞ்சங்கள் வந்து தாமே கலக்கும் என்றறிகிறேன். மரத்தடிக்குழுமத்தில் நான் உள்ளிட்ட இரண்டு மடல்கள் இருக்கின்றன. முதல் மடல் அறிமுக மடல். இரண்டாம் மடல் போட்டிக் கவிதை. ஒரு மடல் எழுதிவிட்டால் இரண்டாம் மடலில் எழுத்தாளனாகவேண்டும் என்பதே மரபென அறிந்து ஆற்றுவழியோடும் இலைபோல் அவ்வாறானேன். என் ஊர் நெல்லை அருகிலுள்ள வீரவநல்லூர் கிராமம், என் பெயர் ஜிஷ்ணு என்றறிந்தால் போதுமானது. மற்ற விலாசம் என்ன செய்துவிடப்போகிறது?

இந்த வலைப்பதிவை உருவாக்கும் போதிய அறிவு எனக்கிருக்கவில்லை. மிகுந்த பிரயாசைப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கினேன். இப்போது இதன் தோற்றம் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில் நீரில்லாமல் வற்றிப்போய்க் கிடக்கும் எங்கள் ஊர்க்குளம் மாதிரி இருந்தது.

எனக்குக் புதுக்கவிதை எழுத விருப்பமுண்டு. அவ்வப்போது எழுதிப்பார்ப்பதுண்டு. அடிக்கடி எழுதும் தெம்பில்லை. மிகுந்த பிரயாசைப்பட்டால் மாதத்திற்கு ஒரு கவிதை எழுதவரும். நாள்களுக்கு நான்கு கவிதைகள் எழுதிடும் யானைகளுக்கு மத்தியில் ஒரு சிற்றெரும்பாய்த் தொடங்கும்போது எனக்கே என் மேல் சிரிப்பும் அனுதாபமும் கவிகிறது. ஆனாலும் எழுதத்தான் போகிறேன். "கழுதை தேய்ந்து கட்டறும்பான" உலகில் "எறும்பு நான் தேய்ந்து தேய்ந்தே யானையாகப்" போகிறேன்.

வணக்க மடல் தற்பெருமை பேசாவிட்டால் அதற்கு மதிப்பில்லை என்று எனக்குச் சொல்லப்பட்ட காரணத்தால் இப்படிப் பேசவேண்டியதாகிவிட்டது.

தமிழ்த்தட்டச்சுக்கு உதவிடும் அனைத்து எழுத்துருச் செயலிகள் உருவாக்கியவர்களுக்கும் வலைப்பதிவாளர்களுக்கும் சுரதாவின் மாற்றிகளுக்கு ஒரு கும்பிடு போட்டுக்கொண்டு ஊற ஆரம்பிக்கிறேன்.