Friday, December 10, 2004

ஓலம் (கவிதை)

இரண்டாவது மாடியைச் சுற்றி
எப்போதும் கேட்டுக்கொண்டேயிருக்கும்
ஓர் ஓலம்.

முன்பொரு சமயம்
தூக்கிட்டுக்கொண்ட
சரவணனின் குரலாகவும் இல்லை
வேறெங்கோ தோன்றி
இங்கு எதிரொலிப்பதாகவுமில்லை
நான் வரும்போது
மிகச்சரியாகத் தொடங்கி
நான் நீங்கும்போது
மிகச்சரியாக முடித்துவிடுகிற
கச்சிதமான விளையாட்டு
பெண்ணொருத்தி யாராவது இருக்கக்கூடும்
என் புலன்களின் வழி
அவளைக் கண்டெடுக்க முடிவதாகப்
பாவித்துக்கொண்டேன், தெருக்களில்
கண்ணில் பட்டு
மறந்து
சட்டென நினைவுக்கு வரமறுக்கும்
ஒரு பெண்ணின் உருவத்தை
அவளுக்குப் பொருத்திவைத்து
மிகவும் சிநேகமானேன்
என் வரவுக்காகக் காத்திருந்து
என் காலடித்தடம் நெருங்க நெருங்க
மெல்லிய குரலில்
ஓலத்தைத் தொடங்குவாள்
சில சமயம் ஆணின் குரலாகத் தோன்றும்
பயத்தில் லேசான ஜில்லிடலும்
புல்லரிப்பும் தோன்ற
நீளும் ஓலத்தில் என்னை மறந்து
அறைக்குள் செல்வேன்...

தொடர்ந்து கொண்டிருந்த
அவிழ்க்கமுடியாத இப்புதிரின் முற்றுப்புள்ளி
அவ்வோலத்தின் சாயல்
என் குரலை ஒத்திருப்பதாக
நான் அறிந்த நேரத்தில் விழுந்தது, அப்போது
ஓலத்தை இழந்து
தனிமையை மீட்டுக்கொண்டு
இன்னொரு புதிரில் ஆழ்ந்தேன்.

Friday, September 24, 2004

பாகல் (கவிதை)


ஆகவே பாகற்காயைப் பற்றி எழுதலாம்.

கொடியெங்கும் சிறிது சிறுதாய்க் காய்த்துத் தொங்கும்
பாகற்காய்கள் மனமெங்கும் பசுமையைப் பரப்புகின்றன
சந்தையில் நல்ல விலைபோகும்
மிதிபாகற்காய்களுக்கு எப்போதுமே மவுசு
கசப்பையும் மீறி அவை விரும்பப்படுகின்றன
சில மனிதர்களைப் போலவே
வராட்டியில் தட்டி பதனப்படுத்தப்பட்டிருக்கும்
பாகல் விதைகள் சுவர்களுக்கு அழகூட்டுகின்றன
சுவற்றில் வராட்டியின் தடத்தில் எறும்புகள் மொய்க்கின்றன
நேற்று ஒரு வராட்டியை உடைத்து
சில பாகல் விதைகளை விதைத்தேன்
நேற்றே விதைகளை விதைத்துவிட்டேன்
ஆகவே பாகற்காயைப் பற்றி நான் எழுதலாம்
கனவு பாகல் விதை முளைக்காமல் போனாலும்
மொய்க்கும் எறும்புகளிலும்
அதில் பூத்திருக்கும் இக்கவிதையிலும்
பாகற்காய் காய்த்திருக்கிறது

Saturday, September 11, 2004

இருப்பின் மீதான கேள்வி (கவிதை)



அலையும் சிறுத்தையில் பொதிந்திருக்கும்
என் விழிப்பை
நாசியுள் புகுந்து தூக்கிப் பறக்கும்
மண்வாசத்தில் பரவிக்கிடக்கும்
என் வீச்சை
காற்றைக் கிழிக்கும் தீயின் வேகத்தில்
இழைந்திருக்கும்
என் இருப்பை
ஒரு வெள்ளத்தின் வேகத்தில் அலைந்துகொண்டிருக்கும்
என் வேகத்தை
சற்றே நிறுத்திப் பார்க்கிறது
விளக்கொளியைத் தேடும் ஒரு விட்டிற்பூச்சி

Sunday, September 05, 2004

பெருங்காலம் (கவிதை)

உடுக்கையொலியின் இடைவெளிக்குள்
பொதிந்திருக்கும் மௌனத்தை
ஒலியாக்கி ஓங்காரமாக்கி
நிலம் கீறிடும் விதைக்குள்
பெருநிழலைப்பரப்பி
அக்கணத்தின் பேரதிர்வைப்
பின்னாளில் சுழியாக்கி
மரணங்களைக்கூட விழாவாக்கி
தன்னை நிறுவிக்கொள்ளும்
காலத்தின் இடையறாத ஓட்டம்
கணக்கில் கொள்ளுமா
ஒரு இரயில் பூச்சியை மிதித்து நசுக்க
நான் செலவிடும் சொடுக்கு நேரத்தை.

Thursday, September 02, 2004

யாரோ ஒருவனின் வானம் (கதை)


மரத்தடிப்போட்டிக்கு உள்ளிட்ட சிறுகதையை வாசிக்க நீங்கள் சொடுக்கவேண்டிய சுட்டி இது.

Wednesday, September 01, 2004

I am not a Maskkkkkkkkkkkkk

நான் முகமூடி இல்லை.

இன்னும் எத்தனைத் தரம் இதையே சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமென்பது புலப்படவில்லை. தனிப்பட்ட மடலில் வேறு " நீ அவனா, அவன் நீயா" என்று கேட்டுச் சலிப்படைய வைக்கிறார்கள். இவர்களால் ஒதுக்கியும் வாழ இயலவில்லை, ஏற்றுக்கொண்டும் வாழ இயலவில்லை.

அத்தனை மெனக்கெட்டு (வீரவநல்லூருக்கு வந்து இணையத்தில் உலாவிப்பாருங்கள், பின்னர் தெரியும் உங்களுக்கு என் மெனக்கெடுதல்) மரத்தடியின் ஓனர்களுக்கு மடல் அனுப்பினால், ஹரன்பிரசன்னா என்னை இரண்டு பேரில் ஒருவராகச் சந்தேகப்படுவதாகச் சொல்லியிருக்கிறார். கவிதைகளையும் கதைகளையும் வைத்து அதன்பின் கைகளைப் பார்க்கமுடியாது போல.

நான் ஏன் முகமூடி இல்லை ?
* உண்மைப் பெயரைச் சொல்லாதவனெல்லாம் முகமூடியென்றால் இங்கு அனைவரும் ஒரு வகையில் முகமூடியே.

* முகமூடி போட்டுக்கொண்டு பலதும் பேசித்திரிகிறவர்களுக்கும் புனைபெயரைச் சொல்லி கதை, கவிதை எழுதுபவர்களுக்கும் உங்களிடத்தில் வேறு வேறு அளவுகோல்கள் உண்டு.

* இணையத்தில் எழுதும்போது ஏற்படும் நெருக்கடிகளுக்கு மாற்று புனைபெயரில் எழுதுவதே என்று சொல்லப்பட்டது. அதிலிருக்கும் உண்மையை உணர்கிறேன். முகமூடி என்று நினைத்துக்கொண்டு எனக்கு வரும் தனிமடல்கள் அதை உருசுப்பிக்கின்றன. எனக்குத் தனி மடல் அனுப்பியவர்களுக்கு, எனக்குப் பதில் எழுதத் தோன்றியவர்களுக்கு மட்டும் பதில் அனுப்பியிருக்கிறேன்.

இன்னும் என்ன வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?

நெல்லை மேயரிடம் ஓடிப்போய் ஒரு சான்றிதழ் தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா? இல்லை பதிமூன்று ஆண்டுகாலம் தனியார் பள்ளியில் ஆசிரியராய் இருந்ததற்கான சான்றிதழ் வேண்டுமா? இல்லை எனது புகைப்படமும், என் சொந்தப் பெயரும், என் தொலைபேசி எண்ணும் வேண்டுமா? (தொலைபேசி வைக்க இயலாத "மாஜி" ஆசிரியன் நான். இதை வைத்துக்கொண்டு இன்னும் திரித்துக்கொள்ளுங்கள் என்னை முகமூடி என்றவர்கள்)

இப்படியெல்லாம் நிரூபிப்பதை எதிர்பார்ப்பது தவறென்று எப்போது உணரப்போகிறீர்கள்?

நாளையே நீங்கள் விரும்பும் எல்லா ஆதாரத்துடன் நான் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

இனியும் முட்டிக்கொண்டு அழப்போவதில்லை. என்னை எந்தப் பிரிவிலும் வைத்துக்கொள்ளுங்கள். சிறிது தூறலுடன் நெல்லை சந்திப்புத் திடலில் வீரவநல்லூருக்குச் செல்லும் பேருந்து எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

இந்தப்பூக்கள் விற்பனைக்கு (கவிதை)

நான் மரத்தடிப் போட்டியில் உள்ளிட்ட கவிதை.
அதன் சுட்டி: http://www.maraththadi.com/article.asp?id=1870

Monday, August 30, 2004

வீரவநல்லூர் (கவிதை)

வீரவநல்லூரைப் பற்றிய கவிதை கண்டிப்பாய் எழுதவேண்டும்
முதல்வரியாய் "அந்தக் காலத்தில் குளத்தில் நீர் இருந்தது",
இரண்டு மூன்று வரிகளுக்குப் பின்
சண்முகா கொட்டகையையும் காந்திமதி டாக்கீஸ¤ம்.
ஊரின் செழுமைக்கு
சந்தையில் மண்டிக்கிடந்த காய்கறிக்கூழ் கொஞ்சம்.
மழை வர்ணனையும்
தெருவில் திரிந்த பசுக்கள் பற்றிய குறிப்பும் அவசியம்.
ஊர்ச்சாத்திரை, திரைகட்டிப் படம்,
சின்ன வயதில் சைக்கிள் ஓட்டிய கதை,
கூனியூருக்குச் செல்லும் பாதை, சுமைதாங்கிக்கல்,
பள்ளிக்கூடம், பொது லைப்ரரி எனத் தேடிப்பிடித்து
வார்த்தைகளை வளைத்தால்
வீரவநல்லூரின், எந்தவொரு ஊரின்
பழைய பொதுப்பிம்பம் தயாராகும்.
ஒரு ஊரைக் கவிதையில் சேமிப்பது சுலபம்.


Friday, August 27, 2004

தனிப்பனை (கவிதை)


பின்னோடிய பல மரங்களில்
ஜன்னல் வழியே உள்வந்து முன்னோடிய அத்தனிப்பனை
என் வீட்டு மாடியில் என்னை வரவேற்று
தன் தனிமை தொலைத்து என் தனிமை திணிக்கிறது
மொட்டை மாடியின் அரையடிச் சுவர் மீதேறிப் பார்த்தால்
தூரத் தெரியும் அதன் நிழல் எழுப்பும் எண்ணங்கள்
பிற்கனவுச் சித்திரங்கள் போல
கோர்த்தெடுக்க முடியாததாய்
நினைவுக்கு வரும்போதே மறந்துவிடுவதாய்
மறந்துவிட்ட நேரம் உள்ளுழலுவதாய்.
தெருவில் நுங்கு விற்பனின் குரல்
கனவில் பனைமரத்தின் குரலாய் ஒலிக்க
சட்டென விடிகிறது எனக்கு மட்டும்
என் வீட்டைக் கடக்கிறான் நுங்கு விற்பவன்
என் நினைவுகள் குவிகின்றன அத்தனிப்பனையின் மீது.
தனிமையெனச் சொல்லிக்கொண்டு
தனிமையின்றி
அதுவும் நானும் இப்போது நீங்களும்.

Tuesday, August 24, 2004

இயல்பாய் (கவிதை)


இயல்பாகவே நிகழவேண்டும் எந்தவொன்றும்
மெல்லிய சாரல் விழுந்த நேரத்தில் மண்வாசம் கிளர்ந்த மாதிரி
என்று தொடங்கியதென சொல்லமுடியாத நம்நட்பு மாதிரி
எந்தக் கணத்தில் காலை புலர்ந்ததென அறியமுடியாத மாதிரி
பெருக்கிய அறையில் தூசி சேர்கிற மாதிரி
தொடங்கிய நேரம்தெரியாமல் வியாபிக்கிற பசி மாதிரி
என்றேனும் நிகழப்போகும் நம்நட்பின் பிரிவுகூட
ஒரு கவிதை போல, என் இயல்பைப் போல
ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பிணமாகிப் போன மனிதன் போல
பிரிந்த சுவடில்லாமல் நிகழ எதிர்பார்க்கிறேன்
இயல்பான எந்தவொன்றும் என்னை மகிழச்செய்கிறது
இயல்பிழந்துபோன நம்நட்புக்கு
பிரிவில் மகிழல் இயல்பென பிரிவோம்

எறும்பிலிருந்து யானைக்கு


இன்று தொட்டுத் தொடர்கிறது என் பயணம். அன்புடை நெஞ்சங்கள் வந்து தாமே கலக்கும் என்றறிகிறேன். மரத்தடிக்குழுமத்தில் நான் உள்ளிட்ட இரண்டு மடல்கள் இருக்கின்றன. முதல் மடல் அறிமுக மடல். இரண்டாம் மடல் போட்டிக் கவிதை. ஒரு மடல் எழுதிவிட்டால் இரண்டாம் மடலில் எழுத்தாளனாகவேண்டும் என்பதே மரபென அறிந்து ஆற்றுவழியோடும் இலைபோல் அவ்வாறானேன். என் ஊர் நெல்லை அருகிலுள்ள வீரவநல்லூர் கிராமம், என் பெயர் ஜிஷ்ணு என்றறிந்தால் போதுமானது. மற்ற விலாசம் என்ன செய்துவிடப்போகிறது?

இந்த வலைப்பதிவை உருவாக்கும் போதிய அறிவு எனக்கிருக்கவில்லை. மிகுந்த பிரயாசைப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கினேன். இப்போது இதன் தோற்றம் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில் நீரில்லாமல் வற்றிப்போய்க் கிடக்கும் எங்கள் ஊர்க்குளம் மாதிரி இருந்தது.

எனக்குக் புதுக்கவிதை எழுத விருப்பமுண்டு. அவ்வப்போது எழுதிப்பார்ப்பதுண்டு. அடிக்கடி எழுதும் தெம்பில்லை. மிகுந்த பிரயாசைப்பட்டால் மாதத்திற்கு ஒரு கவிதை எழுதவரும். நாள்களுக்கு நான்கு கவிதைகள் எழுதிடும் யானைகளுக்கு மத்தியில் ஒரு சிற்றெரும்பாய்த் தொடங்கும்போது எனக்கே என் மேல் சிரிப்பும் அனுதாபமும் கவிகிறது. ஆனாலும் எழுதத்தான் போகிறேன். "கழுதை தேய்ந்து கட்டறும்பான" உலகில் "எறும்பு நான் தேய்ந்து தேய்ந்தே யானையாகப்" போகிறேன்.

வணக்க மடல் தற்பெருமை பேசாவிட்டால் அதற்கு மதிப்பில்லை என்று எனக்குச் சொல்லப்பட்ட காரணத்தால் இப்படிப் பேசவேண்டியதாகிவிட்டது.

தமிழ்த்தட்டச்சுக்கு உதவிடும் அனைத்து எழுத்துருச் செயலிகள் உருவாக்கியவர்களுக்கும் வலைப்பதிவாளர்களுக்கும் சுரதாவின் மாற்றிகளுக்கு ஒரு கும்பிடு போட்டுக்கொண்டு ஊற ஆரம்பிக்கிறேன்.